மத்திய கிழக்கு நாடான சிரியாவில், 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவிவருகிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த இந்தப் போரில் சிரியா அரசு, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு சேர்ந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பலான பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றியது.
அந்நாட்டின் வடமேற்கு மூலையில் துருக்கி நாட்டையொட்டியுள்ள, இத்லிப் மாகாணம் மட்டும் தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனைக் கைப்பற்ற சிரிய கூட்டுப் படையினர், அங்கு தொடர் தாக்குதல்களை அரங்கேற்றி வந்தனர்.
இதனால் செய்வதறியாது ஆயிரக்கணக்கான சிரியர்கள் அண்டை நாடான துருக்கியை நோக்கிப் படையெடுத்தனர். இந்தச் சிக்கலைத் தீர்க்க துருக்கி, அதன் எல்லையையொட்டிய இத்லிப் உள்பட சிரியா மாகாணங்களில் 12 கண்காணிப்புக் கூண்டுகளை அமைத்து அங்கு ராணுவத்தைக் குவித்தது. எனினும், போர் நிறுத்த விதிகளை மீறி சிரிய அரசுப் படைகள் அவ்வப்போது அங்கு தாக்குதல் நடத்திவந்தன.