சமீபகாலமாக டொனால்ட் ட்ரம்ப்பின் சமூக வலைத்தளப் பதிவுகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. சில நேரங்களில் அது வன்முறையைத் தூண்டும் விதமாக அமைந்து விடுகிறது.
சமூக வலைத்தளத்தில் வன்முறைப் பதிவு
குறிப்பாக, அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்றதை, அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடமான கேப்பிட்டல் கட்டட வளாகத்தில் நடைபெற்றது. அப்போது சமூக வலைத்தளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் ட்ரம்ப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள், கேப்பிட்டல் கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
ட்விட்டர் நிரந்தரமாக முடக்கம்
இதன் காரணமாக, அவரது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டன. அவரது கணக்குகளைக் கோடிக்கணக்கான மக்கள் பின்பற்றி வந்தனர். அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருந்தது.
ஃபேஸ்புக் 2 ஆண்டுகள் தடை
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு வரை முடக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப்பின் கணக்கானது, அவரது பதிவுகளால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என்பது உறுதியான பிறகு அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.