தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா? ஒபாமாவிடம் சாட்சியம் கேட்ட ட்ரம்பின் கோரிக்கை நிராகரிப்பு - 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல்

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம், 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அரசு உதவியதற்கான சாட்சியத்தை நாடாளுமன்றத்தில் அளிக்கக் கோரிய டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை நாடாளுமன்ற விசாரணைக் குழுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

By

Published : May 15, 2020, 11:49 PM IST

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற ரஷ்ய அரசு உதவியதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகளால் குற்றசாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்விவகாரத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தொடர்ந்து சிலர் மீது அழுத்தம் கொடுத்து வருவதாக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, பராக் ஒபாமா நாடாளுமன்றத்தில் விளக்கி, ரஷ்யா தேர்தலில் உதவியதை நிரூபிக்கவேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார்.

டொனால்ட் ட்ரம்பின் இந்தக் கோரிக்கையை அந்நாட்டின் நாடாளுமன்ற விசாரணைக் குழுத் தலைவர் லின்சே க்ரஹாம் தற்போது நிராகரித்துள்ளார். ”ஒரு முன்னாள் அதிபரை இவ்வாறு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கக் கோரி வற்புறுத்துவது தவறான முன்மாதிரியாகிவிடும்” என ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்தது குறித்து லின்ஸே க்ரஹம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்து, அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப் பி ஐ விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வருகிற ஜூன் மாதம் எஃப் பி ஐ யின் அறிக்கைகளை நாடாளுமன்ற விசாரணைக் குழு கேட்டறியும் எனவும் க்ரஹம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக முன்னாள் அதிபர் ஒபாமாவின் மீது ’ஒபாமாகேட்’ எனும் குற்றச்சாட்டை ட்ரம்ப் முன் வைத்தார். அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது அவர் 150 மில்லியன் டாலர்களை ஈரானுக்கு வழங்கியதாகவும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகை அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்பட்டதாகவும் சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இந்தக் குற்றச்சாட்டுகள் 'ஒபாமாகேட்' என்ற அழைக்கப்படுகின்றன.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் அதிபர் ஒபாமாவின் மீது ட்ரம்ப் அரசு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது அந்நாட்டு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க :பதவியை ராஜினாமா செய்யும் உலக வர்த்தக அமைப்புத் தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details