ஐ.ஏ.என்.எஸ்., சி.என்.என்., ஃபைவ் தெர்டி எயிட் போன்ற நிறுவனங்களின் கருத்துக்கணிப்பின்படி அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடனுக்கும், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரீஸிக்கும் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக அறிய முடிகிறது.
இருப்பினும், குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தல் மீண்டும் போட்டியிட்டுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரப்புரை சமூக வலைத்தளங்களில் தாக்கம் செலுத்தி உள்ளதாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா கருத்து தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் வாக்களித்தோரின் மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோர், இந்தத் தேர்தலில் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.
ஒருபுறம் புளோரிடா, அரிசோனா, மிச்சிகன் ஆகிய மூன்று மாகாணங்களில் பிடன் வெற்றி வாகை சூடுவார் என கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
மற்றொரு புறம் ஜோ பிடனுக்கு 89% வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளதென ஃபைவ் தெர்டி எயிட் நிறுவனத்தின் தேர்தல் முடிவு கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
ஜனநாயக கட்சி சார்பில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் களமிறங்கிய ஹிலாரி கிளின்டனை விட இரண்டு மடங்கு பிடனின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாகவே பெரும்பாலான தேர்தல் கள அரசியல் ஆய்வு செய்திகள் தகவல் கூறுகின்றன.
அதேபோல, தற்போதைய அதிபர் ட்ரம்ப்பின் வெற்றிவாய்ப்பு வெறும் 10 சதவீதமாகவே உள்ளதாக சி.என்.என் கருத்து கணிப்பு கூறியுள்ளது.
2016 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடந்த பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில், டிரம்ப் தனது எதிராளியான ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் இருந்தார். ஆனால் பின்னர் வெற்றி பெற்றார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில், அதிபர் ட்ரம்ப் அவரது போட்டியாளர் பிடனைவிட கீழே உள்ளார். பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.