பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, காஷ்மீர் குறித்து ட்ரம்ப் கூறிய கருத்துதான் இந்தியாவை திடுக்கிட செய்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் தன்னை மத்தியஸ்தம் செய்துவைக்குமாறு பிரதமர் மோடி தன்னிடம் கேட்டுக்கொண்டதாக அதிர்ச்சி தகவலை ட்ரம்ப் பதிவு செய்தார். காஷ்மீர் இந்தியாவின் அங்கம், இது குறித்து பேசவோ விவாதிக்கவோ எதுவும் இல்லை என்பதே இந்திய அரசின் தொடர் நிலைப்பாடாக இருந்துவருகிறது. இந்நிலையில் ட்ரம்ப் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.
ட்ரம்ப்பின் சர்ச்சை கருத்து இந்தச் சர்ச்சைக்கு உடனடி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தனது ட்விட்டரில் மறுப்பு பதிவை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி அவ்வாறு எந்த கோரிக்கையும் ட்ரம்பிடம் முன்வைக்கவில்லை என ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு எனத் தெரிவித்தார். சிம்லா ஒப்பந்தத்தின்படி இருநாடுகளிடையே உள்ள சிக்கல்களில் மூன்றாவது நாட்டின் தலையீட்டிற்கு இடமே இல்லை என்பதே, இந்தியாவின் நிலைப்பாடு. இது டிரம்ப்புக்கு நன்றாகவேத் தெரியும் என பதிவிட்டுள்ளார் ரவீஷ்குமார்.
எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை இன்று கையிலெடுத்து பிரதமரை விளக்கமளிக்க வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.