அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் செவ்வாய்க்கிழமை (நவ.03) நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக வழக்கத்தைவிட பல்லாயிரக்கணக்கான மக்கள் இத்தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றான வட கரோலினாவில் தபால் வாக்குகள் வந்து சேர்வதற்கான இறுதி தேதி ஏழு நாள்கள் நீட்டிக்கப்பட்டது. ஆனால், இந்த காலக்கெடு நீட்டிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க குடியரசு கட்சி அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குடியரசு கட்சியினர் கோரிக்கையை நிராகரித்து, ஒரு வார காலக்கெடு நீட்டிப்பிற்கு அனுமதி வழங்கினர். இந்தநிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவுகளை அதிபர் ட்ரம்ப் மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டரில், "இந்த ஒரு முட்டாள்தனமான முடிவு, இது நம் நாட்டிற்கு மிகவும் மோசமானது. இடைப்பட்ட நாள்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி முடிவடைய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
வட கரோலினா மாகாணத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ட்ரம்பைவிட ஜோ பிடன் 0.7 விழுக்காடு கூடுதல் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (அக்.28) மதியம் வரை முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை பயன்படுத்தி, சுமார் 7.5 கோடி பேர் வாக்களித்துள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் மொத்தமே 13.8 கோடி வாக்குகளே பதிவானது குறிப்பிடத்தக்கது. கரோனா பரவல் காரணமாக முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை அதிகம் பேர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:எப்போது திரும்பும் இயல்புநிலை? விளக்கும் அமெரிக்க தொற்று நோய் நிபுணர்