டர்னிங் பாய்ண்ட் இன் யு.எஸ்.ஏ. (Turning Point in USA)என்ற அமைப்பு சார்பாக ஃபுளோரிடாவில் நடைபெற்ற பழமைவாதத்துக்கு ஆதரவான மாணவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனக்கு எதிரான பதவிநீக்க தீர்மானங்கள் குறித்து பேசினார்.
அப்போது, "எனக்கு எதிராகப் பிரதிநிதிகள் சபையில் (நாடாளுமன்ற கீழ் சபை) நிறைவேற்றப்பட்டுள்ள பதவிநீக்கத் தீர்மானங்களை செனட் சபைக்கு அனுப்பாமலிருப்பது நியாயமானதல்ல. பதவிநீக்கத் தீர்மானத்தை உடனடியாக செனட் சபைக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் (ஜனநாயகக் கட்சியினர்) அமெரிக்க அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமாகச் செயல்படுகின்றனர். ஜனநாயகக் கட்சியினருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லைபோல. பதவிநீக்க தீர்மானங்களுக்கு ஆதரவாக குடியரசுக் கட்சியின் ஒரு பிரதிநிதிகூட வாக்களிக்கவில்லை.
நம் அரசியல் சாசன சட்டத்தையும் வரலாற்றையும் கிழித்தெறிந்து நமது நாட்டின் எல்லைக்கோடுகளை அழிக்க ஜனநாயகக் கட்சியினர் முயன்றுவருகின்றனர். இதனைத் தடுக்க வேண்டியது உங்கள் கடமை" எனத் தெரிவித்தார்.