உலகளவில் கோவிட்-19 தொற்றால் உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவைவிட வேறெந்த நாடும் அதிகம் பாதிக்கப்படவில்லை. அமெரிக்காவில் இதுவரை சுமார் 8.50 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்தனர்.
பெரும்பாலான தொழில்துறைகள் இந்த வைரஸ் தொற்றால் முற்றிலும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவிற்கு வேலைவாய்ப்பை நோக்கி சட்டப்பூர்வமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு அடுத்த 60 நாள்கள் தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த உத்தரவு குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் கூறுகையில், "இது மிகவும் வலிமையான ஒரு உத்தரவு. இதன் மூலம் பொருளாதாரம் மீண்டும் செயல்படத் தொடங்கும்போது அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.
வைரஸ் தொற்று காரணமாக வேலையிழக்கும் அமெரிக்கர்களின் வேலையை வெளிநாட்டவர்களுக்குத் தருவது என்பது பெரும் அநீதி" என்றார்.