தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டிக்டாக் செயலிக்குத் தடை - அதிரடி காட்டும் ட்ரம்ப்!

வாஷிங்டன் : தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் குற்றம் சாட்டி டிக்டாக், வீ சாட் ஆகிய செயலிகளுக்கு ட்ரம்ப் அரசு தடை செய்துள்ளது.

By

Published : Aug 7, 2020, 2:18 PM IST

Trump
Trump

இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி டிக்டாக் உள்ளிட்ட 106 செயலிகளுக்கு மத்திய அரசு முன்னதாகத் தடை விதித்தது.

மேலும், இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வேறு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக, அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்காவில் விரைவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என்றும் தகவல் பரவியது.

இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக், வீ சாட் ஆகிய செயலிகளை தடை செய்யும் புதிய உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்துடன் அனைத்து வகையான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிபர் ட்ரம்ப் கூறுகையில், "சீன நிறுவனங்களால் உருவாக்கப்படும் செயலிகளால் அமெரிக்காவின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஒரு குறிப்பிட்ட செயலியின் (டிக்டாக்) செயல்பாடு குறித்து தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள டிக்டாக் செயலி, அதைப் பயன்படுத்துவோரின் தகவல்களை தானாகவே எடுத்துக் கொள்கிறது. இதனால் அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட விவரங்கள், சொத்து விவரங்கள் போன்றவற்றை சீன கம்யூனிஸ்ட் கட்சி அறிந்து கொள்ள முடிகிறது.

இதன் மூலம் அமெரிக்க உயர் அலுவலர்களின் தனிப்பட்ட விவரங்களை அறியவும், அவர்களின் நடமாட்டதைத் கண்காணிக்கவும், ஏன் அவர்களை மிரட்டவும்கூட முடியும். இக்காரணங்களால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவு 45 நாள்கள் அமலில் இருக்கும்" என்றார்.

அதேபோல், சீனாவின் ’டென்சென்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் வீ சாட் செயலியையும், அதன் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் தளத்தையும் தடை செய்யும் மற்றொரு உத்தரவிலும் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

டிக்டாக் செயலியைப் போலவே வீ சாட் செயலியும் பயனாளர்களின் விவரங்களை தானாகவே எடுத்துக்கொள்ளக் கூடியவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இந்த உத்தரவு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தைகளைக் கரோனா பாதிக்காது: ட்ரம்பின் சர்ச்சை பேச்சை நீக்கிய ட்விட்டர், ஃபேஸ்புக்

ABOUT THE AUTHOR

...view details