வடகொரியா அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி மூடியிருந்த ஏவுகணை தொழிற்சாலையை தொடங்கியிருப்பது போன்ற புகைப்படம் சாட்டிலைட் மூலம் கிடைத்துள்ளது.
வடகொரியா அவ்வப்போது அணுகுண்டு, மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்திவந்தது. இதனால் ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இதனைத்தொடர்ந்து, ஐ.நா ஆதரவுடன் அமெரிக்கா வடகொரியாவிற்கு பொருளாதாரத் தடை விதித்தது. இந்தச் சூழலில் வடகொரியா தங்கள் நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை ரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை நடத்தி அச்சுறுத்திவருகிறது. இதனிடையே பியொங்யாங் நகருக்கு அருகேயுள்ள தொழிற்சாலைக்கு பக்கத்தில் மற்றொரு புதிய கட்டடத்தை வடகொரியா எழுப்பியுள்ளதை பிளானெட் லேப்ஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.