அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(அக்.02) அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து இருவரும், பெத்தேஸ்டாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். மருத்துவக்குழுவினரின் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வந்த டொனால்ட் ட்ரம்ப்பின் உடல் நிலை முழுமையாக குணமடையாத போதிலும், அலுவல் பணி, தேர்தல் பணிகளைக் கருத்தில்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெள்ளை மாளிகை திரும்பினார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'நான் இன்று வால்டர் ரீட் மருத்துவ மையத்திலிருந்து வெள்ளை மாளிகை திரும்பினேன். மிகவும் நன்றாக இருக்கிறேன். கரோனாவைக் கண்டு பயப்பட வேண்டாம். உங்களது வாழ்க்கையில் கரோனாவை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். எனது நிர்வாகத்தின் கீழ், சில சிறந்த மருந்துகளை உருவாக்கியுள்ளோம். நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நன்றாக உணர்கிறேன்' என்றார்.