அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி (நேற்று) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், முடிவுகளை மாற்ற ஜனநாயகக்கட்சி சதி செய்ய முயற்சிப்பதாக ட்ரம்ப் சர்ச்சை கருத்து தெரிவித்தார். இது விதி மீறல் எனக் கூறி, அந்தப் பதிவை ட்விட்டர் நீக்கியுள்ளது.
ட்ரம்ப்பின் அந்தப் பதிவில், "பெரிய வெற்றியை நோக்கியுள்ளோம். ஆனால், முடிவுகளை மாற்ற ஜனநாயக கட்சி சதி செய்ய முயற்சிக்கிறது. இம்மாதிரியான வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதிலிருந்து தடுத்து நிறுத்துவோம். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குகள் செலுத்தக் கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சர்ச்சையான பதிவு என்றும்; தேர்தல் குறித்து தவறான தகவல் பகிரப்பட்டுள்ளது எனவும் கூறி ட்விட்டர் நிறுவனம் அதனை நீக்கியுள்ளது.