தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

"கரோனா தொற்றின் உண்மைகளை ட்ரம்ப் மறைக்கிறார்" - அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர்!

வாஷிங்டன்: அதிபர் ட்ரம்ப் கரோனா தொற்று தொடர்பான உண்மைகளை மறைப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி குற்றம்சாட்டியுள்ளார்.

Trump downplaying COVID-19
Trump downplaying COVID-19

By

Published : Sep 10, 2020, 11:43 AM IST

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடவுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவாகவே உள்ளதால், இரு கட்சிகளும் தங்களது பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான நான்சி பெலோசி, "கரோனா வைரஸின் பேரழிவு தன்மையை ட்ரம்ப் முழுமையாக அறிந்திருந்தார். ஆனால் உண்மைகளை மறைக்கிறார். அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ள மறுக்கிறார்.

இதன் காரணமாக, நம் நாட்டு மக்கள் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி எளிதில் பாதிக்கப்படும் வகையில் உள்ளனர். கரோனா காரணமாக ஏற்படும் விளைவுகளை பெருமளவு தவிர்த்திருக்க முடியும். ஆனால் ட்ரம்ப் உண்மையைச் சொல்லவோ அல்லது அமெரிக்க மக்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படவோ மறுத்துவிட்டார்.

ட்ரம்ப் பரப்பும் கொடிய போலி செய்திகளும், மக்களின் உயிர்களை மதிக்காத அவரின் போக்கும், இதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஒரு பெரும் சோகம். இப்போதும்கூட, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, அமெரிக்கர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை ட்ரம்ப் கேட்க மறுக்கிறார். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நமக்கு அறிவியல் ரீதியான திட்டம் தேவை" என்று நான்சி பெலோசி கூறினார்.

அமெரிக்காவில் இதுவரை கரோனா தொற்று காரணமாக 65 லட்சத்து 49 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 239 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கமலா ஹாரிஸ் அதிபரானால் அது நாட்டிற்கு அவமானம் - அதிபர் ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details