கரோனா வைரஸ் எனப்படும் கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கியுள்ள நிலையில், அதன் தாக்கம் உலக வல்லாதிக்கமான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அங்கு இதுவரை சுமார் 14 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவே கரோனா காரணமாக முடங்கியுள்ள நிலையில், விரைவில் தேர்தலைச் சந்திக்கவுள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப், நிலைமை கட்டுக்குள் கொண்டுவர போர்கால நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிவரும் இந்நோய் பாதிப்பிற்கு சீனாவே பொறுப்பேற்க வேண்டும் என்ற விதத்தில் ட்ரம்ப் தொடர்ச்சியாக பேசிவருகிறார். சைனிஸ் வைரஸான கரோனா வைரஸை சீனா பொறுப்புடன் கையாண்டிருந்தால் இத்தகையான நெருக்கடியை உலகம் சந்திக்க நேரிடாது எனவும், சீனாவின் தவறான செயல்பாட்டால் உலகம் பெரும் விலை கொடுத்துவருகிறது எனவும் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:முகக்கவசம், வென்ட்டிலேட்டர்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை