ஒட்டாவா:கனடா நாட்டின் நாடாளுமன்றத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். கனடா நாடாளுமன்றத்தில் உள்ள 338 இடங்களுக்கு நேற்று (செப்.20) பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இந்தப் பொதுத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த எரின் ஓ டூல் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
ஜஸ்டின் ட்ரூடோ இம்முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்சியைக் கலைத்து தேர்தல்
கடந்த 2015ஆம் ஆண்டு முதன்முதலாக ஆட்சியமைத்த ஜஸ்டின் ட்ரூடோ சந்திக்கும் மூன்றாவது தேர்தல் இது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஜஸ்டின் ட்ரூடோ 157 இடங்களை மட்டும் வென்றிருந்தார். கடந்த தேர்தலிலேயே அவருக்கு மக்கள் ஆதரவு குறைந்ததால்தான் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டது. கனடாவில் ஆட்சியமைக்க 170 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகமே கரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், கனடாவில் கரோனா தொற்று பரவலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அந்நாட்டு அரசு கட்டுப்படுத்தியது.
காலநிலை மாற்றம், அனைவருக்குமான வீடு போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றது.