பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக் செயலி, அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி தடை செய்ய முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க பதிப்பை, வேறு நிறுவனத்திற்கு 45 நாள்களுக்குள் விற்பனை செய்ய வேண்டும்; இல்லையென்றால் அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தின் பரிவர்த்தனைக்குத் தடை விதிக்கும் உத்தரவிலும் அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க அதிபரின் புதிய அறிவிப்பு டிக்டாக் நிறுவனத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அதில், 'அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழுவின் நிபந்தனைகளின் பேரில் பைட் டான்ஸ், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் சீன பங்குதாரர்கள் அமெரிக்காவில் செய்துள்ள முதலீடுகள் உள்ளிட்ட அசையாச் சொத்துகள் மற்றும் அனைத்து வகையான அசையும் சொத்துகள் என எல்லாவற்றையும் 90 நாட்களுக்குள் விலக்கிக்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இவரின் திடீர் அறிவிப்புக்கு டிக்டாக் நிறுவனம் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.