தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'அவர்களும் அதிபர்கள்தான், அவர்களின் பண்பை ட்ரம்பிடம் எதிர்பார்க்க முடியாது' - திருவனந்தபுரம் எம்பி

திருவனந்தபுரம்: அமெரிக்காவில் முன்னாள் குடியரசு கட்சியின் அதிபர்களிடம் இருந்து பண்பை ட்ரம்பிடம் எதிர்பார்க்க முடியாது என்று திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் பதிவிட்டுள்ளார்.

Shashi Tharoor
Shashi Tharoor

By

Published : Nov 6, 2020, 10:22 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்றுவருகிறது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெறுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

ஆனால், இத்தேர்தலில் பெரும் முறைக்கேடு நடந்துள்ளதாகவும், தேர்தலின் முடிவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் ட்ரம்ப், தேர்தல் குறித்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எவ்வித ஆதாரமுமின்றி முன்வைத்தார். இதனால் சிஎன்என், ஃபாக்ஸ் போன்ற முக்கியச் சேனல்கள் ட்ரம்ப்பின் பேச்சை ஒளிபரப்புவதை பாதியிலேயே நிறுத்தின.

இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர், தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் அமெரிக்க அதிபர்களான புஷ் சீனியர் (41ஆவது அதிபர்) மற்றும் புஷ் ஜூனியர் (43ஆவது அதிபர்) ஆகியோர் தங்களுக்கு அடுத்து வரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர்களுக்கு எழுதியக் கடிதங்களைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் சசி தரூர், "இரண்டு வெவ்வேறு குடியரசுக் கட்சி அதிபர்கள், புஷ் சீனியர் (41ஆவது அதிபர்) மற்றும் புஷ் ஜூனியர் (43ஆவது அதிபர்), தங்களுக்குப் பின் வரும் அதிபர்களுக்கு வாழ்த்துக் கூறி இந்த அருமையான கடிதங்களை எழுதினர். அவை அரசியல் நாகரிகத்தின் தரநிலைகள். துரதிர்ஷ்டவசமாக, ட்ரம்பிடம் இதை நம்மால் எதிர்பார்க்க இயலாது" என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 41ஆவது அதிபர் புஷ் சீனியர் 42ஆவது அதிபர் பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதம்

அன்புள்ள பில்,

நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்த (அதிபர்) அலுவலகத்தில் நுழைந்தபோது, எந்தவொரு அதிசயத்தையும் மரியாதையையும் உணர்ந்தேனோ, அதே உணர்வு இன்றும் இருந்தது. நீங்களும் அதை உணருவீர்கள்.

இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில அதிபர்கள் இங்கு தனிமையை உணர்ந்ததாகக் கூறினார்கள், ஆனால் நான் ஒருபோதும் அவ்வாறு உணரவில்லை.

ஏற்கனவே கடினமாக உள்ள விஷயங்களும் விமர்சனங்களால் மிகவும் கடினமானதாக மாறும். அறிவுரை வழங்குவதில் நான் சிறந்தவன் இல்லை. இருப்பினும், ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், விமர்சகர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டாம்.

இந்தக் கடிதத்தை படிக்கும்போது, நீங்கள் அதிபராக இருப்பீர்கள். நீங்களும், உங்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இப்போது உங்கள் வெற்றி என்பது நம் நாட்டின் வெற்றி. வாழ்த்துகள்!

அமெரிக்காவின் 43ஆவது அதிபர் புஷ் ஜூனியர் 44ஆவது அதிபர் பராக் ஒபாமாவுக்கு எழுதிய கடிதம்

அன்புள்ள பராக்,

எங்கள் அதிபரானதற்கு வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் ஒரு அருமையான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளீர்கள்.

உங்களது பணியின் பொறுப்பை அறிந்து கொள்ளும் பாக்கியம் மிகச் சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இந்தத் தருணத்தின் உற்சாகத்தையும் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மிகச் சிலரே அறிவார்கள்.

விமர்சகர்கள் ஆத்திரப்படுவார்கள். உங்கள் “நண்பர்கள்” உங்களை ஏமாற்றுவார்கள். ஆனால், உங்களை ஆறுதல்படுத்த சர்வ வல்லமையுள்ள கடவுள், உன்னை நேசிக்கும் ஒரு குடும்பம், நான் உள்பட உங்களுக்காக ஒரு நாடு உங்களிடம் இருக்கும்.

கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்.

முன்னாள் அமெரிக்க அதிபர்கள் எல்லாம் தங்களுக்குப் பின் வரும் அதிபர்களை வாழ்த்தி கடிதம் எழுதியுள்ள நிலையில், ட்ரம்ப் மட்டும் தொடர்ந்து பிடனை தாக்கி பேசிவருகிறார்.

இதையும் படிங்க: குடியரசு கட்சியின் கோட்டைகளை தகர்த்த ஜோ பிடன் - ஜார்ஜியா, பென்சில்வேனியாவில் முன்னிலை!

ABOUT THE AUTHOR

...view details