அமெரிக்காவின் புளோரிடா பகுதியை சேர்ந்தவர் மார்வின் (75). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் சில விலங்குகளும், கொடிய பறவை இனங்களில் ஒன்றான கேஸ்சோவரீஸ் என்ற பறவை வளர்த்து வந்துள்ளார். அன்றாடம் இவைகளுக்கு உணவு அளிப்பதை வாடிக்கையாக கொண்ட மார்வின் நேற்று காலையில் வழக்கம் போல் தோட்டத்தில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவளிக்க சென்றுள்ளார். அப்போது அந்த பறவை திடீரென முதியவரை தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்தார்.
முதியவர் இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசையாய், பாசமாய் வளர்த்த பறவை முதியவரை தாக்கி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கேஸ்சோவரீஸ் பறவை பற்றிய அறிமுகம்:
உலகில் உள்ள மிகவும் ஆபத்தான பறவை இனங்களில் கேஸ்சோவரீஸ் பறவை இனமும் ஒன்று. இது மனிதனுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்று சொல்லப்படுகிறது. குயின்லாந்து, ஆஸ்திரேலியா, நியூகினியா உள்ளிட்ட வெப்பமண்டல பகுதிகளில் இந்தக் கொடிய பறவை இனங்கள் காணப்படுகின்றன. இந்தப் பறவையின் கால்கள்தான் மிகவும் ஆபத்தானது. 3 விரல்களுடன் கூடிய நகங்கள் மனிதர்களை கொல்லும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்தது. காட்டிற்குள் இருக்கும் இவை, சில சமயங்களில் உணவிற்காக மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வருவது வழக்கம்.
இதுவரை இந்தப் பறவையால் ஆஸ்திரேலியாவில் 150 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தப் பறவையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற கொடிய வகை இனங்களை வளர்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.