"விளையாட்டு வினையாகும்" என்ற நமது முன்னோர்களின் சொல் பல இடங்களில் உண்மையாகத் தான் செய்கிறது. ஆபத்தை உணராமல் வெறும் ஜாலிக்காக செய்யும் இளைஞர்களின் குறும்புத்தனம், பல நேரங்களில் அவர்களே எதிர்ப்பார்காத விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது கரோனா வைரஸால் பயத்தில் உலக நாடுகளே திணறி கொண்டிருக்கும் நேரத்தில், பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பொறுப்பற்ற செயல் அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சூப்பர் மார்கெட்டில் பொருள்களை வாங்கச் சென்றுள்ளார். அப்போது, காய்கறிகள் விற்பனை செய்யும் இடத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண், கரோனா வைரஸ் பெருந்தொற்று இருமலில் பரவும் என்பதால், அவர் விளையாட்டாக இருமியுள்ளார். இதைப் பார்த்த சக வாடிக்கையாளர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நிர்வாகத்தினர் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் ஜஸ்ட் பிராங் எனக் கேலி செய்துள்ளார். இருப்பினும் மக்களின் பாதுகாப்பை கருதி வைக்கப்பட்டிருந்த 26 லட்சம் மதிப்புள்ள உணவு பொருள்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு சூப்பர் மார்கெட்டின் உரிமையாளர் தள்ளப்பட்டார்.