ஸ்பேஸ்-எக்ஸ் என்ற தனியார் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், புளோரிடாவிலிருக்கும் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று மாலை ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் இரண்டு நாசா வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சாதனை முயற்சியைக் காண்பதற்கு கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர்.
இரண்டு நாள்களாக மழை பெய்துகொண்டிருந்த காரணத்தினால், ராக்கெட் ஏவுதலில் சிறிது குழப்பும் நிலவிவந்தது. இருப்பினும் நேற்று வானிலை சீரான காரணத்தினால், திட்டமிட்டப்படியே விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சரியாக ராக்கெட் ஏவுதலுக்கு 17 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், வானிலை திடீரென்று மாற்றம் ஏற்பட்டது. அப்போது ஏவுதல் நடைபெற்றால் சிக்கல் ஏற்படும் என ஸ்பேஸ்-எக்ஸ் வானிலை அலுவலர்கள் எச்சரித்த காரணத்தினால் விண்வெளிப் பயணத்தை ஒத்திவைக்க முடிவு செய்தனர்.
இந்த ராக்கெட் வரும் 30ஆம் தேதி அதிகாலை விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதலுக்குத் தயாராகும் காட்சிகளை நாசா இணையதளத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு உணவு டெலிவரி செய்யும் ஜப்பான் விண்கலம்!