அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் இருந்து விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்புவது வழக்கமான ஒன்று. இதனை அடுத்து, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் தயாரித்த டிராகன் எனும் விண்கலம் மூலம் முதன்முறையாக நாசாவின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு நேற்று அனுப்பட்டனர்.
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷெனான் வால்கர் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் மற்றும் சொய்சி நொகூச்சி எனும் ஜப்பானிய வீரர் ஒருவர் உட்பட 4 வீரர்களை ஏந்தியவாறு ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஃபால்கன் ராக்கெட்டில் இருந்து நேற்று வெற்றிகரமாக பிரிந்த டிராகன் கேப்சூல் இந்திய நேரப்படி, இன்று காலை 9:31 மணி அளவில் சர்வதேச விண்வெளி மையத்தைச் சென்றடைந்தது.