சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் அவ்வப்போது விண்வெளிக்கு செல்வது வழக்கம்.
அதன்படி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகிய இரு வீரர்கள் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடம் மூலம் விண்வெளி சென்றனர்.
வழக்கமாக விண்வெளி பயணம் சார்ந்த ராக்கெட்டுகளை அமெரிக்க அரசின் நாசா மேற்கொள்ளும். ஆனால், இந்த முறை எலான் மஸ்க் என்பவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் ராக்கெட் பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்கா விண்வெளி வரலாற்றிலேயே தனியார் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் வீரர்கள் விண்ணுக்கு அழைத்துச் செல்லப்படுவது இதுவே முதல்முறையாகும்.
சுமார் இரண்டு மாதங்களாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட அமெரிக்க வீரர்கள் தற்போது பத்திரமாக பூமிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரத்யேக காப்சியூல் (Capsule) மூலம் புறப்பட்ட விண்வெளி வீரர்கள், நேற்றிரவு ஃபோலோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்சிக்கோ வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்பாக இறங்கினர்.
1975ஆம் ஆண்டிற்கு பிறகு நீரில் தரையிறங்கும் முதல் அமெரிக்க விண்கலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளிக்கு செல்லும் செலவைகளை குறைக்க நாசா சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே விண்வெளிக்கு செல்ல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட்டுகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஸ்பெஸ்எக்ஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆர்வம் காட்டின. போயிங் நிறுவனத்தின் ராக்கெட்டுகள் பெரியளவில் வெற்றி பெறாத நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் தற்போது இரண்டு வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வந்திருப்பது அந்நிறுவனத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு விரைவில் தடை - ட்ரம்ப் தகவல்