ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவற்றில் உண்மைக்குப் புறம்பான, சர்ச்சைக்குரிய, இனவெறி, வன்முறையைத் தூண்டும் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டுவருவதாகப் பலரும் புகார் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், ட்ரம்ப் பதிவிட்டிருந்த ஒரு ட்வீட் உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டிருப்பதாக ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை செய்தியை அதில் சேர்த்தது.
இதனிடையே, ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினர் படுகொலைக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்றுவரும் போராட்டம் குறித்து ஃபேஸ்புக்கில், கொள்ளை நடைபெறும்போது துப்பாக்கிச் சூடும் நடைபெறும் என்ற தொனியில் "When Looting Starts, Shooting Starts" என்ற சொல்லை ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.
இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் பதிவை நீக்க ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் மறுப்பு தெரிவிக்க, அவரை அந்நிறுவன ஊழியர்களே கடுமையாகச் சாடினர்.