அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, அந்நிய நாட்டான உக்ரைனிடம் ரகசியமாக உதவி கேட்டார் என அவர் மீது எதிர்க்கட்சியினரான ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதன்மூலம் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்ததாகக் கூறி அவர் மீது பதவிநீக்க நடவடிக்கை அக்கட்சி மேற்கொண்டுள்ளது.
இந்தப் பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, அதன் மீதான விசாரணை செனட் சபையில் நடைபெற்றுவருகிறது. பதவி நீக்க விசாரணையின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், பதவி நீக்கத்திற்கான தீர்மானத்தை வாசித்தார்.
தீர்மானத்தை செனட் சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். தீர்மானம் வாசிக்கப்பட்டபின், அதன் மீதான விசாரணை வரும் 21ஆம் தேதி நடத்தப்படும் எனக் கூறி அவை ஒத்திவைக்கப்பட்டது.
ஜனநாயகக் கட்சியினரின் இந்த விசாரணை தேவையற்ற செயல் என்று விமர்சித்துள்ள ட்ரம்ப், உக்ரைன் தரப்பு இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதை சுட்டிக்காட்டியள்ளார். மேலும், ஒரு தொலைப்பேசி அழைப்புக்காக மக்கள் செல்வாக்குமிக்க அதிபரை பதவி நீக்கம் செய்வேன் என்பது நகைப்புக்குரிய செயல் என ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ஆளுநர் அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும், மீறக்கூடாது' - சீத்தாராம் யெச்சூரி