அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் களமிறங்குகிறார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிடனுக்கு ஆதரவாகவே பல கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குக் பொலிட்டிக்கல் ரிப்போர்ட் என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், போட்டி கடினமாக உள்ள தொகுதிகளிலும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக உள்ள தொகுதிகளிலும் குடியரசுக் கட்சி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா, வாஷிங்டன், நியூஜெர்ஸி, நியூ மெக்ஸிகோ, நியூயார்க் உள்ளிட்ட 14 மாகாணங்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக உள்ளன. இதன்மூலம், ஜனநாயகக் கட்சி 290 வாக்குகள் பெறும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ளோரிடா, ஜார்ஜியா, லோவா உள்ளிட்ட மாகாணங்களில் போட்டி சவாலாக உள்ளது. குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக 13 மாகாணங்கள் உள்ளன. இதன்மூலம் அக்கட்சி, 77 வாக்குகள் பெற உள்ளன. எனவே போட்டி கடினமாக உள்ள மாகாணங்களில் குடியரசுக் கட்சி வெற்றிபெற்றால் மட்டுமே ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.