ஒவ்வொரு அதிபர் தேர்தலும் அதற்கென ஒரு தனித்துவத்தைப் பெற்றிருப்பது இயல்புதான். ஆனால், கரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில் இந்தாண்டு நடைபெறவுள்ள 59ஆவது அதிபர் தேர்தல் இதற்கு முன் உலகம் கண்டிராத அசாதாரண தேர்தலாக இருக்கப்போகிறது.
அந்தத் தேர்தல் 2020 நவம்பர் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று வாக்காளர்கள் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பர் (Presidential Electors). இதையடுத்து, இவர்கள் டிசம்பர் 14ஆம் தேதி புதிய அதிபரையும், துணை அதிபரையும் தேர்ந்தெடுப்பர் அல்லது தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பையும், துணை அதிபர் மைக் பென்சையும் மீண்டும் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.
பெருந்தொற்று அரசியல்
கோவிட்-19 பெருந்தொற்றுக்கிடையே அமெரிக்க மாகாணங்கள் ஊரடங்கைத் தளர்த்திவருகின்றன.
நாடு விரைவில் இயல்புநிலைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கையோடு அதிபர் ட்ரம்ப் நாடு முழுவதும் பயணித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலின்பேரில் அவரது இல்லத்தில் இருந்தபடியே இணையம் மூலம் தேர்தல் பரப்புரையில் மும்முரம் காட்டிவருகிறார்.
இதனிடையே, அமெரிக்காவில் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்குகிறது. வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிடாத அளவிற்கு வேலையிழப்பு நிகழ்ந்துள்ளது.
தேர்தல் களம்
பிடனின் ஆலோசகர்கள் தேர்தலில் அவர் வெற்றிபெறுவதற்கு அமோக வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஜோ பிடனின் தேர்தல் பரப்புரை மேலாளர் ஜீன் ஓ மாலே டிலோன், "அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்குத் தேவையானதைவிட அதிகளவில் வாக்குகள் பெறுவோம்" என உறுதியாகக் கூறுகிறார்.
குறிப்பாக, குடியரசுக் கட்சியின் எஃகு கோட்டையாகக் கருதப்படும் அரிசோனா மாகாணத்தில் வெற்றிபெறுவோம் என டிலோன் அடித்துக் கூறுகிறார்.
இதற்கிடையே, 15 மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப் வெற்றிபெறுவதற்கு வாய்ப்புள்ளதாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன.
ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு ட்ரம்ப்பைக் கலக்கமடையச் செய்திருக்கும். 2016 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குடியரசுக் கட்சி கோலோச்சும் அரிசோனா, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் அதிக கவனம் செலுத்தினார். இருப்பினும், அந்த மாகாணங்கள் அனைத்திலும் ஹிலாரி தோல்வியையே தழுவினார்.
அரிசோனா போன்ற மாகாணங்களுக்குப் பதிலாக விஸ்கான்சின் மாகாணத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதாக ஓ மாலே டிலோன் கூறியுள்ளார்.
அதிக மாகாணங்களை தனது பரப்புரை வலையில் பிடன் கொண்டுவருவாரா இல்லை அவற்றை அசுரபலம் படைத்த ட்ரம்ப் கையில் கொடுத்துவிடுவாரா என்பது வரும் நாள்களில்தான் தெரியும்.
ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் யார்?
கமலா ஹாரிஸும், அமி கோல்புசரும் ஜோ பிடன் பரப்புரைக்காக நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, முன்னாள் பிரதிநிதிகள் (கீழ்) சபை உறுப்பினர் ஸ்டேசி ஆப்ரகாம்ஸ் தனியார் தொலைக்காட்சியில் பிடனுடன் சமீபத்தில் தோன்றினார்.
பிடனுக்குச் சாதகமாக டாமி சக்வொர்த்தும் இணையப் பரப்புரையில் இரண்டு முறை ஈடுபட்டது தலைப்புச் செய்தியானது. ஜனநாயகக் கட்சியின் மூத்தத் தலைவர் செனடர் எலிசபெத் வாரன் அவருடன் சேர்ந்து செய்தித்தாள் ஒன்றில் கருத்துக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
துணை அதிபர் பதவி யாருக்குக் கொடுக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியினர் ஊடகங்களின் வாயிலாக பிடனுக்குக் கூறிவருகின்றனர்.
இவற்றை நாம் பொருட்படுத்த வேண்டுமா, இவை அனைத்தும் துணை அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்தலா, இதனை பிடன் எப்படி எடுத்துக் கொள்கிறார்? இந்தக் கேள்விகளுக்கான விடை, வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒருவருக்கு மட்டுமே உள்ளது; அது அதிபர் வேட்பாளரே!
வெற்றியைத் தீர்மானிக்கும் காசு ?