கடந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் பெரும் வெற்றிபெற்றார். இருப்பினும், இத்தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அதிபர் ட்ரம்ப் பல்வேறு வழக்குகளையும் தொடர்ந்துள்ளார்.
மேலும், அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்றபோதே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும், ரஷ்ய அதிபர் புடின், பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தேர்தல் முடிவுகள் குறித்து ஒரு தரப்பு ஆட்சேபனை தெரிவித்துள்ளதால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும்வரை காத்திருப்பதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (டிச. 14) அதிபர், துணை அதிபரை எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தனர். 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களில் பைடன்-ஹாரிஸ் தரப்புக்கு 306 வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் அதிபர் ட்ரம்பிற்கு வெறும் 232 வாக்குகளே கிடைத்தன.
இந்த முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஜோ பைடனுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறார்.
ரஷ்ய-அமெரிக்க ஒத்துழைப்பு என்பது சமத்துவம், பரஸ்பர மரியாதை, கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் என்று குறிப்பிட்ட ரஷ்ய அதிபர் புடின், இரு நாடுகளின் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு