தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான கண்டன தீர்மானம்: அடுத்து நடக்கப்போவது என்ன? - latest news about President Trump Impeachment

'ட்ரம்ப்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தில், அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றாலும் அது ஒன்றும் தவறு இல்லை என்றே குடியரசுக் கட்சி கூறும்' என்கிறார் சர்வதேச அமைதிக்கான அமைப்பான கர்னகியின் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஜார்ஜ் பெர்கோவிச். இந்தக் கருத்தை அவர் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.

President Trump Impeachment
President Trump Impeachment

By

Published : Dec 7, 2019, 10:50 PM IST

கண்டன தீர்மானத்தால் பதவி பறிபோகாது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் கண்டன தீர்மானம் கொண்டுவரஅவைத்தலைவர் நான்சி பெலோசிகடந்த வியாழக்கிழமை அனுமதி அளித்தார். எனினும், இந்தக் கண்டன தீர்மானம் எப்போது கொண்டுவரப்படும் என்பது குறித்த தகவலை அவர் தெரிவிக்கவில்லை.

அப்படி கண்டன தீர்மானம் கொண்டுவந்தால் அதனை எதிர்கொள்ளும் நான்காவது அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப்தான் இருக்கப் போகிறார்.

இவர்தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி புகழ்பெற்று பின்னர் கோடீஸ்வர மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) அதிபராக இருந்தவர்.

ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள்தான் என்ன?

வெள்ளை மாளிகையில் தன்னை சந்திக்கவந்த உக்ரைன் அதிபரிடம், தனது அரசியல் எதிரி ஜோ பிடன் மீதும் அவரது மகன் ஹண்ட்டர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று ட்ரம்ப் கேட்டுக்கொண்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

இதன்மூலம், அதிபர் பதவியை அவர் தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர். இந்தக் குற்றச்சாட்டை அடுத்தே ட்ரம்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவருவதற்கான முயற்சி கடந்த செப்டம்பரில் தொடங்கியது.

அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசியபோது, உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்கா அளிக்கும் என்றும் அதற்கு பிரதி உதவியாக ஜோ பிடன், அவரது குடும்பத்தினர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க துணை அதிபராக ஜோ பிடன் இருந்தபோது அவரது மகன் ஹண்ட்டர் உக்ரைனின் எரிசக்தி நிறுவனத்தில் சேர்ந்தார். இதன் பின்னணியை விசாரிக்க வேண்டும் என்பதே ட்ரம்ப்பின் எதிர்பார்ப்பு.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்களை ஹேக் செய்தது ரஷ்யா அல்ல; உக்ரைன்தான் என்ற ஒரு கருத்தும் நிலவிவருகிறது. எனினும், அமெரிக்க வல்லுநர்கள் இதை ஏற்கவில்லை. ஜனநாயகத்திற்கு எதிரான இந்தச் செயலில் ஈடுபட்டது ரஷ்யாதான் என்று அவர்கள் கூறிவருகிறார்கள்.

எனினும், உக்ரைன்தான் மின்னஞ்சல்களை ஹேக் செய்தது என்பதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என ட்ரம்ப், விளாடிமிர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அடுத்து என்ன நடக்கும்?

அமெரிக்க பிரதிநிதிகள் சபையை கட்டுப்படுத்தும் வலிமையுடன் இருக்கும் ஜனநாயக கட்சியினர், ட்ரம்ப்புக்கு எதிரான ஆதாரங்களை அமெரிக்க மேல் சபையான செனட்டுக்கு அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அது முடிந்ததும், செனட் தனது விசாரணையை தொடங்கும். அதிபர் ட்ரம்ப்பை குற்றவாளி என்று அறிவிக்கவோ அல்லது அவரை பதவி நீக்கம் செய்யவோ வேண்டுமானால், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், குடியரசுக் கட்சி செனட்டில் பெரும்பான்மை இடங்களைக் கொண்டிருப்பதால், ட்ரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பில்லை. எனினும், இந்த விசாரணை தேர்தல் பரப்புரையின்போது எதிர்க்கட்சிகளுக்கு பிரம்மாஸ்திரமாக மாறி அரசியல் போராக உருவெடுக்கும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இது குறித்துசர்வதேச அமைதிக்கான அமைப்பான கர்னகியின் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் ஜார்ஜ் பெர்கோவிச் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “செனட்டில் விசாரணை நடக்குமானால், ட்ரம்ப்பை பாதுகாப்பதற்கான முயற்சிகள் முழுவீச்சில் நடக்கும். இறுதியில் ட்ரம்ப்பை குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பது குறித்து செனட் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். செனட்டில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால் பெரும்பாலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட மாட்டார். முடிவில் 'என் மீதான குற்றச்சாட்டு உண்மையற்றது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. நான் ஒரு நிரபராதி' என்றும் ட்ரம்ப் கூறுவார். இதுதான் நடக்கப் போகிறது.

குடியரசுக் கட்சியினர் எப்போதும் ட்ரம்ப்புக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு உண்மை என்றாலும், அது ஒன்றும் தவறு இல்லை என்றே அவர்கள் கூறுவார்கள்” என்கிறார்.

எதிர்க்கட்சிக்கு பயன் இருக்குமா?

அமெரிக்க வரலாற்றில் ஆண்ட்ரூ ஜான்சன், பில் கிளின்டன் ஆகிய இரு அதிபர்களுக்கு எதிராக கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எனினும், ​​அவர்கள் தண்டிக்கப்படவில்லை. அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று பில் கிளின்டன் மீண்டும் அதிபரானார். வாட்டர்கேட் (அரசின் ராஜாங்க தகவல்கள் கசிவு) ஊழலில் சிக்கிய அதிபர் ரிச்சர்டு நிக்சன், கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே பதவி விலகினார்.

இந்த இரண்டு வழக்குகளும் முற்றிலும் வேறுபட்டவை. ஆண்ட்ரூ ஜான்சனுக்கு எதிரான வழக்கு 1870களில் நடந்தது. அவர் மீண்டும் அதிபராகவில்லை. பில் கிளின்டனுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதிலும, மீண்டும் அவர் அதிபரானார். இதிலிருந்து ட்ரம்ப்பின் எதிர்காலம் குறித்து நீங்கள் எந்த ஒரு முடிவுக்கும் வரலாம். ட்ரம்ப்புக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு வலிமையானது.

"ட்ரம்ப் என்ன செய்தாலும் அதனை ஆதரிக்கக்கூடியவர்களாக 40 விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. ட்ரம்ப்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தில் குறிப்பிடப்படும் விஷயங்கள் தேர்தலில் முக்கிய இடம் பெறும். எனவே தனக்குத் தேவைப்படும் கூடுதல் ஆதரவை ட்ரம்ப்பால் பெற முடியுமா என்று கணிப்பது மிகவும் கடினம்” என்கிறார் பெர்கோவிச்.

2020ஆம் ஆண்டுக்கான அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தடுமாறிக் கொண்டிருக்கும் ஜனநாயகக் கட்சி, ட்ரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டைக் கொண்டு அவரது செல்வாக்கை சரியச் செய்வதற்கான நடவடிக்கைகளை எந்த அளவுக்கு மேற்கொள்ளும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஜனநாயகக் கட்சிக்கான அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்த பிரபல தலைவரான கமலா ஹாரிஸ் தற்போது போட்டியிலிருந்து வெளியேறியிருக்கிறார். முன்னாள் நியூயார்க் நகர மேயரும் ஊடக அதிபருமான மைக்கேல் ப்ளூம்பெர்க் அதிபர் போட்டிக்குள் நுழைந்திருக்கிறார். இதன்மூலம், நாட்டின் உச்சபட்ச பதவிக்கு நடைபெறும் தேர்தல் பரப்புரையில் அனல் பறக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.

“2016இல் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களுக்கான போட்டியின் தொடக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் முன்னணியில் இருக்கவில்லை. எனினும், அவர் அதிபர் வேட்பாளராக தேர்வாகி அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றார். ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை அதிபர் வேட்பாளர்களுக்கான போட்டியில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முன்னிலையில் இருக்கிறார். எனினும், யார் அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை தற்போது கணிக்க முடியாது.

மைக் ப்ளூம்பெர்க் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கருதுகிறேன். இதையும்கூட முன்கூட்டியே கணிப்பது கடினம்தான். ஏனெனில், இன்னும் ஒரு வருடத்திற்குப் பிறகுதான் தேர்தல் வர உள்ளது” என்கிறார் பெர்கோவிச்.

இதையும் படிங்க: 'ஜஸ்டின் ட்ரூடோ இரட்டை வேடக்காரர்' - செமத்தியாக திட்டிய ட்ரம்ப்!

ABOUT THE AUTHOR

...view details