அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்துக்கு உலகிலேயே முதல் நாடாக பிரிட்டனும், இரண்டாவது நாடாக பஹ்ரைனும் ஒப்புதல் வழங்கியிருந்தன.
இதனைத் தொடர்ந்து, அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கக் கோரி ஃபைசர் நிறுவனம், அமெரிக்கா மருந்து மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி சோதனையில் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி சோதனையில் 38 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அதில் சாதகமான பாதுகாப்பான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட பாதுகாப்பு சிக்கல் எழவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தைச் சேர்ந்த சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு, இரண்டு நாள்களுக்கு முன்பு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தியது.
கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில், முக்கியத் திருப்புமுனையாக உலகிலேயே முதல்நாடாக பிரிட்டனில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியுள்ளது. மார்கரேட் கீனான் என்ற 90 வயது மூதாட்டி, உலகிலேயே முதல் நபராகத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.