9/11 தாக்குதலுக்குப் பிறகு அல்-கொய்தாவுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக தலிபான் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானில் படையெடுத்தன. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகள் ஆஃப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டன. இதனால் ஆஃப்கானிஸ்தான் அமைதியின்றி இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா - தலிபான்கள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்து, தோஹாவில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பின்னர், அமெரிக்கப் படைகளை 14 மாதங்களில் மொத்தமாக திரும்பப் பெறுவோம் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனால் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஆஃப்கானிஸ்தானில் நிலவிய போர் சூழல் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த வாரம் காபூலில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு தலிபான்கள் பொறுப்பேற்கவில்லை.
இதனால் தோஹா ஒப்பந்தம் ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் வன்முறைகளுக்கும், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. மாறாக அது கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கும், மக்களுக்கும் இடையே மோதல்போக்கையே உருவாக்கியுள்ளது. அடையாளம் தெரியாதவர்களால் காபூலில் உள்ள பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், பயங்கரவாதிகள் யாருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும் இல்லை என்பதை புரிய வைத்திருக்கிறது. இதனால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.