அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர், காவலரின் பிடியில் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கிவருகிறது. இதன் எதிரொலியாக அந்நாடு முழுவதும் நிறவெறிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டங்கள் பிரேசில், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது.
கடந்த காலத்தில் கறுப்பின மக்களை அடிமைப்படுத்தியோர், ஏகாதிபத்தியத்தில் ஈடுபட்டோரின் சிலைகளை நீக்குமாறு நிறவெறிக்கு எதிரான ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதனிடையே, அச்சிலைகளுக்குச் சாயம் பூசுவது, அடித்து உடைப்பது போன்ற செயல்களிலும் போராட்டக்காரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அந்நாட்டு நாடாளுமன்றம் எதிரே அமைந்துள்ள புகழ்பெற்ற சிலை மீது நேற்று சிவப்பு சாயம் பூசப்பட்ட சம்பவம் அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவமதிக்கப்பட்ட அந்தச் சிலை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஃபிரான்ஸ் அமைச்சர் ஜீன் பாப்டிஸ்ட் கெல்பெர்டை கௌரவிக்க நிறுவப்பட்டதாகும். இவர், ஃபிரான்ஸ் காலனி ஆதிக்க பிராந்தியங்களில் அடிமைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து 'Code Noir' என்ற சட்டத்தை இயற்றியவராவார்.