அமெரிக்காவில் நியூயார்க் நகரில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று புகழ்பெற்ற இரட்டை கோபுரம் பயங்கரவாதிகளால் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது.
இதில் ஏற்றத்தாழ மூன்றாயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இன்றைய நாள் 21ஆம் நூற்றாண்டின் கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது.
சிதைந்த 3 ஆயிரம் கனவுகள்
இந்தக் கொடூர தாக்குதலில் உயிரிழந்த 2,977 பேரையும் அவர்களது குடும்பத்தினரையும் நினைவுகூர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "செப்டம்பர் 11, 2001 அன்று நியூயார்க் நகரம், ஆர்லிங்டன், வர்ஜீனியா, ஷாங்க்ஸ்வில்லே, பென்சில்வேனியா பகுதிகளில் நடந்த தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,977 பேர் உயிரிழந்தனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் அமெரிக்கா நினைவுகூர்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒற்றுமையாக இருப்பாேம்
இந்தத் துயரச் சம்பவம் நம்மைப் பெரியளவில் பாதிக்கப்படக்கூடிய வகையில் இருந்தாலும், ஒற்றுமையாக இருந்தால் யாராலும் நம்மை வென்றிட முடியாது என்பதை நாம் கற்றுக்கொண்டோம்.
அன்றைய நாளில் உயிரைப் பணயம் வைத்து பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர், இஎம்டி, கட்டுமான தொழிலாளர்கள், மருத்துவர், செவிலியர் உள்பட உதவிய ஒவ்வொருவரையும் மதிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
அல்கொய்தா இயக்கத்தால் கடத்தப்பட்ட விமானங்கள் மோதியதில், நியூயார்க்கின் உலக வர்த்தக மையத்தின் இரண்டு கோபுரங்களும் வெறும் 102 நிமிடங்களில் இடிந்து விழுந்தன என்பது நினைவுகூரத்தக்க ஒன்றாகும்.
இதையும் படிங்க:அமெரிக்க-சீனா இடையேயான போட்டி மோதலாகாது - வெள்ளை மாளிகை