அமெரிக்காவில், பொதுவாக முன்னாள் அதிபர்கள் இந்நாள் அதிபர்கள் குறித்தோ ஆட்சி குறித்தோ பெரும்பாலும் விமர்சிக்கமாட்டார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா இந்நாள் அதிபர் ட்ரம்ப் கரோனா தொற்றை முறையாகக் கையாளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விமர்சனம் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை தனது நிர்வாகத்தில் பணிபுரிந்தவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டார். அது தொடர்பான ஆடியோவை யாகூ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கோவிட்-19 தொற்றை ட்ரம்ப் கையாண்ட விதம் ஒரு குழப்பமான முழு பேரழிவுக்கு வித்திட்டுள்ளதாக ஒபாமா விமர்சித்தார்.
மேலும் ரஷ்யா விசாரணை தொடர்பாக அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ-யிடம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அதிபர் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளின் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட, நீதித் துறை எடுத்த முடிவு, அமெரிக்காவின் சட்ட அமைப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றார்.