நியூயார்க்: கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் நியூயார்க் மாகாண அரசு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது.
நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக அம்மாகாண ஆளுநர் கியூமோ விடுத்துள்ள அறிக்கையில், இந்தப் பனிப்புயல் சாதாரணமானது அல்ல, இதில், முக்கிய கவலை என்னவென்றால், இன்று பிற்பகலில் பனிப்புயல் ஆபத்தான நிலையை அடையலாம். பனிப்பொழிவு காரணமாக சாலைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. சாலைகளில் கொட்டியுள்ள பனியை அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.
நியூயார்க்வாசிகள் சாலைகளிலும் பயணிக்க வேண்டும் என்றால், திட்டமிட்டு செல்லுங்கள். மிகவும் அவசியமான பயணம் என்றால் மட்டும் வெளியே செல்லுங்கள். மற்றப்படி வெளியே வரவேண்டாம். லாங் ஐலேண்ட் ரெயில்ரோடு மற்றும் மெட்ரோ-நார்த் பகுதிகளின் போக்குவரத்து சேவை முடங்கிபோய் உள்ளது. நியூயார்க் நகரம், லாங் தீவு மற்றும் மிட்-ஹட்சன் பிராந்தியங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.