அமெரிக்க அதிபர் யார் என்பதில், ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய மாகாணங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், தேர்தலில் வெற்றிப்பெற்று விட்டோம் போன்ற தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி விடக்கூடாது என்பதில் பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் கவனமுடன் செயல்பட்டு வருகிறது.
நேற்று அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரில், "பெரிய வெற்றியை நோக்கியுள்ளோம். ஆனால், முடிவுகளை மாற்ற ஜனநாயக கட்சி சதி செய்ய முயற்சிக்கிறது. இம்மாதிரியான வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதிலிருந்து தடுத்து நிறுத்துவோம். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குகள் செலுத்தக் கூடாது" என பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையான பதிவு என்றும்; தேர்தல் குறித்து தவறான தகவல் பகிரப்பட்டுள்ளது எனவும் கூறி ட்விட்டர் நிறுவனம் உடனடியாக அதனை நீக்கியது.