உலகம் முழுவதும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மே மாதத்திற்குப் பின் குறைந்திருந்திருந்த கரோனா பரவல், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதேநேரம் கரோனா தடுப்பு மருந்தின் சோதனையும் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அமெரிக்காவின் ஃபைஸர், மாடர்னா நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்து 95% தடுப்பாற்றலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து 90% தடுப்பாற்றலும் கொண்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், "அறிவியல் உலகின் இந்த அற்புத சாதனையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த முடியாது. மனித குல வரலாற்றிலேயே எந்தவொரு தடுப்பு மருந்தும் இவ்வளவு வேகமாக உருவாக்கப்பட்டதில்லை. தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் நமது அறிவியல் சமூகம் தற்போது புதிய தரத்தை எட்டியுள்ளது.
தடுப்பு மருந்து முடிவுகளைப் பார்த்த பின் கரரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த தடுப்பு மருந்தை உருவாக்க நாம் எந்த அளவு வேகம் காட்டினோமோ, அதே அளவு வேகத்தில் இந்த தடுப்பு மருந்தை உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் நியாமான முறையில் விநியோகிக்க வேண்டும்" என்றார்.