கால்பந்து விளையாட்டில் பிரேசில் நாட்டின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் நெய்மர். சமீபத்தில் நெய்மரின் தாயார் நடினுக்கும் 22 வயதான இளைஞர் டியாகோ ரமோஸ் என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
நெயமர் தனது தாயார் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தில் " மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா. நான் உங்களை விரும்புகிறேன்’’ எனப் பதிவிட்டிருந்தார். இதுமட்டுமின்றி டியாகோ ரமோஸ் இருபாலின ஈர்ப்பு கொண்டவர் என்ற தகவலும் சமூக வலைதளத்தில் கசிந்தது.
இந்நிலையில், நெய்மர் தனது நண்பர்களுடன் ஆன்லைன் கேமிங் தளத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது டியாகோ ரமோஸின் இருபாலின ஈர்ப்பு குறித்தும், தன்பால் ஈர்ப்பு குறித்தும் கிண்டல் செய்து பேசியுள்ளனர். இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தன்பால் ஈர்ப்பு ஆர்வலரான அக்ரிபினோ மாகல்ஹேஸ், நெய்மர் மற்றும் அவரது நண்பர்கள் மீது குற்றம், வெறுக்கத்தக்க பேச்சு, மரண அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக நெய்மரின் தகவல் தொடர்பு குழுவினரை தொடர்பு கொண்ட போது அவர் எவ்வித தகவலும் அளிக்க மறுத்துவிட்டார்.