கஜகஸ்தான் நாட்டிலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன் செலுத்தப்பட்ட சோயுஸ் காப்ஸ்யூல் விண்கலம் மூலம் அமெரிக்காவின் கிறிஸ் காசிடி, ரஷ்யாவின் அனடோலி இவானிஷின், இவான் வாக்னர் ஆகியோர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்.
அங்கு ஏற்கனவே இருந்த அமெரிக்காவின் ஜெசிகா மீர், ஆண்ட்ரூ மோர்கன், ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் ஆகியோருடன் இணைந்தனர். அதைத்தொடர்ந்து அமெரிக்க விண்வெளி வீரர்கள் மூவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்தவாறே செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய கிறிஸ் காசிடி, "விண்வெளியில் எங்கள் குழு தனிமைப்படுத்தப்படும் என்பது ஒரு ஆண்டுக்கு முன்பே எங்களுக்குத் தெரியும். ஆனால் உலக மக்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து தனிமைப்படுத்திக்கொள்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது" என்றார்.
கடந்த ஆறு மாதங்களாக விண்வெளி ஆய்வு மையத்திலிருந்த ஜெசிகா மீர், ஆண்ட்ரூ மோர்கன், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விண்வெளி வீரர் ஆகியோர் அடுத்த வாரம் பூமிக்குத் திரும்ப உள்ளனர்.