பிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவில் நடைபெற்ற 11ஆவது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு, பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான உத்திகள் குறித்து விவாதித்ததுடன், வர்த்தகம், நிதி ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தியது. சம வாய்ப்புகள் கொண்ட ஒரு உலகத்தை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த பிரிக்ஸ் அமைப்பு, அதன் முன்னேற்றப் பாதையில் உள்ள தடைகளை சரியாக அடையாளம் கண்டுள்ளது.
பிரிக்ஸ் (BRICS) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து முக்கிய நாடுகள் இணைந்த கூட்டமைப்பின் சுருக்கமாகும். அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.5 விழுக்காடு குறைக்கக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) எச்சரித்தது, இது தென் ஆப்பிரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும்.
உலக பொருளாதாரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து பிரிக்ஸ் தலைவர்கள் விவாதித்தனர். அப்போது, "பயங்கரவாதத்தால் உலகப் பொருளாதாரம் கோடிக்கணக்கான டாலர்களை இழந்துள்ளது. உலகளவில் 2.25 லட்சம் மக்கள் உயிரிழந்தனர்" என நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
ஏழு வாரங்களுக்கு முன்பு, ஐநா பொதுக்கூட்டத்துக்கிடையே நியூயார்க் நகரில் சந்தித்துப் பேசிய பிரிக்ஸ் தலைவர்கள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான உத்திகளைச் செயல்படுத்த முடிவு செய்தனர். இதன் விளைவாக, ரசாயன ஆயுதங்களைத் தடை செய்வது உள்பட அனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ஆதரவை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுக்க தவறிய பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் சில நாள்களுக்கு முன்பு ஒப்புக்கொண்டன.
செயல்முறை சிக்கல்களை உருவாக்கி பாகிஸ்தானை மீட்க சீனா வரும்போது, பயங்கரவாத எதிர்ப்பு உத்திகள் செயலிழக்கின்றன.
கடந்த 10 ஆண்டுகளில், பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பு, இணக்கத்தன்மை ஆகியவற்றின் அளவு கேள்விக்குறியாகியுள்ளது. பிரிக்ஸ் நாடுகளிடையே வர்த்தகத்தின் அளவு உலக சந்தையில் 15 விழுக்காடு மட்டுமே என மோடி தனது உரையில் வெளிப்படுத்தி இருந்தார். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23 சதவீதமும், உலக மக்கள் தொகையில் 42 சதவீதமும் கொண்ட பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் பரஸ்பர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். கடந்த காலத்தில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனியுடன் சவால்விட்டு அமெரிக்கா, ஜப்பானுடன் பிரிக்ஸ் நாடுகள் உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் என்று மதிப்பீடுகள் இருந்தன.