2016 அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும், அதற்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உதவியாக இருந்ததாகவும் புகார் எழுந்தது.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய மூத்த வழக்கறிஞர் ராபர்ட் முல்லர், 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த விசாரணையின் அறிக்கையை, 2019 மார்ச் 22ஆம் தேதி அமெரிக்கத் தலைமை வழக்கறிஞர் வில் பாரிடம் அவர் ஒப்படைத்தார்.
அதில், ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்ய தலையீட்டுக்கும் சம்பந்தம் இருப்பதாக போதிய ஆதாரங்கள் இல்லையென்று முல்லர் தெரிவித்திருந்தார்.
மேலும், தன் விசாரணையைத் தடுக்க அதிபர் ட்ரம்ப் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனாலும் முயற்சி செய்ததாக முல்லர் கூறியுள்ளார். முக்கியமாக, அதிபர் ட்ரம்ப் நிரபராதியா ? இல்லையா ? என்று அறிக்கையில் எங்கும் அவர் குறிப்பிடவில்லை.
இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திவரும் நாடாளுமன்ற விசாரணைக் குழு, வழக்கறிஞர் முல்லரை ஜூலை 17ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.
அதனை முல்லர் ஏற்றுக்கொண்டதாக விசாரணைக் குழு தலைவர்கள் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தனர். அமெரிக்க மக்களின் வலியுறுத்தலின் பேரால் விசாரணைக் குழு இந்த முடிவெடுத்துள்ளதாக அவர்கள் கூறினர்.
அதன்படி, அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு குறித்த விசாரணையில் முதன்முறையாகப் பொதுமக்கள் முன்னிலையில் வழக்கறிஞர் முல்லர் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.