வாஷிங்டன்:அமெரிக்காவின் குற்ற வழக்குகளின் வரலாற்றை புரட்டி பார்த்தவர்களுக்கு மறக்க முடியாத பெயராய் பதிந்திருப்பது சாமுவேல் லிட்டில். லிட்டில் என பெயர் வைத்திருக்கும் இவர் செய்த கொலைகளின் பட்டியலோ நீண்டு கொண்டே செல்கிறது. இவரால் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், பாலியல் தொழிலாளிகள், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், சமூகத்தின் ஓரங்களில் வாழும் ஏழை மக்கள். இவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் அந்த கொலைக்கான காரணமோ, குற்றவாளியை அடையாளம் காணும் விசாரணைகளோ அவ்வளவு எளிமையாக காவல் துறையினருக்கு இருந்ததில்லை.
அமெரிக்க காவல் துறை அளித்த தகவலின்படி, இதுவரை இவர் 93 கொலைகளை அவர் செய்துள்ளார். அதில் இதுவரை 60 கொலைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 1970ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த கொலைகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் 2005ஆம் ஆண்டில் 93ஆவது கொலையை செய்தார் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 80 வயதாகும் இவர் கலிபோர்னியாவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இருந்துவந்தார். இவர் நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட சில நோய்களால் பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.