Latest International News - ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு தனியொரு ஆளாகப் போராட்டத்தைத் தொடங்கியவர்தான் இந்த கிரேட்டா. இப்போது அவரின் சுவடுகளைப் பின்பற்றி லட்சக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் பருவநிலையைக் காக்க "Friday for Future" என்ற போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மாணவர்களின் இந்த எழுச்சிமிகு போராட்டத்தைக் கண்ட ஐநா, பருவநிலை மாற்றம் குறித்து உலகத் தலைவர்கள் மத்தியில் பேச கிரேட்டா தன்பெர்க், புருனோ ரோட்ரிக்ஸ் (Bruno Rodriguez) உள்ளிட்ட இளம் செயற்பாட்டாளர்களை அழைத்தது. உலகத் தலைவர்கள் கூடியிருந்த அந்த அரங்கில், கொஞ்சமும் பதற்றமின்றி நிதானமாகப் பேசத் தொடங்கினார் இந்த சின்னஞ்சிறு போராளி.
"நான் இங்கு இருக்கவேகூடாது. உலகிலுள்ள மற்றொரு பகுதியில் மகிழ்வுடன் பள்ளிக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், உங்கள் வெற்று வார்த்தைகளைக்கொண்டு எங்கள் குழந்தைப் பருவத்தையும் கனவுகளையும் முற்றிலுமாக திருடிவிட்டீர்கள்" என்று அவரது மழலை மாறாத குரலில் பேச்சைத் தொடங்கியபோது அரங்கமே அமைதியில் ஆழ்ந்தது.
தொடர்ந்து பேசிய கிரேட்டா, "கடந்த 30 வருடங்களாகப் பருவநிலையைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவியல் மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அதைத் துளியும் செயல்படுத்தாமலே, போதிய நடவடிக்கையை எடுக்கிறோம் என்று எப்படி உங்களால் சொல்லமுடிகிறது" என்று உலகத் தலைவர்களைப் பார்த்து அவர் கேட்ட கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை.
இயற்கை அழிப்புகளைக்கூட வெறும் பொருளாதார குறியீடுகளாக மட்டும் பார்க்கும் சில வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை நோக்கி, "பருவநிலை மாற்றம் குறித்து செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளதை அறிந்தும், நீங்கள் செயல்படாமல் இருப்பீர்களேயானால் அது உங்களைக் கொடிய அரக்கர்களாகவே மாற்றும். உலகமே ஒரு மாபெரும் அழிவை எதிர்நோக்கி இருக்கும்போது, எப்படி உங்களால் இன்னும் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடிகிறது?" என்று அவர் கேட்ட கேள்வி மனசாட்சி உள்ள அனைவருக்கும் உறுத்தலை ஏற்படுத்தியிருக்கும்.
உலகமே அடுத்துவரும் ஆண்டுகளில் சந்தித்திக்வுள்ள மிக முக்கிய பிரச்னை, புவி வெப்பமயமாதல்தான்! அடுத்துவரும் 10 ஆண்டுகள் ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை 50 சதவிகிதமாகக் குறைக்க வேண்டும் என்று பாரீஸில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தம் குறித்து மிகக் காட்டமாக தனது விமர்சனத்தைத் தொடங்கிய கிரேட்டா, "அடுத்த 10 ஆண்டுகளில் வெளியிடும் கரியமில வாயுவின் அளவை பாதியாகக் குறைப்பது, உலகம் சந்திக்கவிருக்கும் பெரும் அழிவை 50 சதவிகிதம் மட்டுமே தடுக்கும் வாய்ப்பை அளிக்கும். இந்த 50 சதவிகிதம் என்பது உங்களை வேண்டுமானால் திருப்திப்படுத்தலாம். ஆனால் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இளைய தலைமுறையினர், நீங்கள் செய்த இந்த பெரும் துரோகத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டோம்” என்று கூறியபோது அரங்கமே அதிர்ந்தது.
தொடர்ந்து பேசிய அவர், "இளைய தலைமுறையினர் அனைவரும் உங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் எதுவும் முயலவில்லை என்றால், நாங்கள் எப்போதும் உங்களை மன்னிக்க மாட்டோம். நீங்கள் விரும்பினாலும் சரி; விரும்பாவிட்டாலும் சரி மாற்றங்கள் நிகழத்தான் போகிறது" என்று சக தலைமுறையினரின் மீது நம்பிக்கை வைத்து அவர் தனது பேச்சை தீர்க்கமாக முடித்தவுடன் எழுந்த கைத்தட்டல்கள் அடங்க பல நிமிடங்கள் ஆயின.
வெறும் பணமும் பொருளாதாரமும் மட்டும் அடுத்த தலைமுறையைக் கட்டமைக்க உதவாது என்பதைப் பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் உணராதபோதும்; இந்த இளம் போராளி அதைத் தெளிவாக உணர்ந்து பேசிய பேச்சைப் பலரும் பாராட்டி வருகின்றனர். பாராட்டுவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அந்த பிஞ்சு குரலிலிருந்து வந்த கருத்தைத் துளியாவது உலகத் தலைவர்கள் கேட்டால்தான் அடுத்த தலைமுறை நம்மை வசைபாடாமல் இருக்கும்.
இதையும் படிக்கலாமே: காஷ்மீர் பிரச்னையை தீர்க்க முன்வரும் அமெரிக்கா!