அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இன்று இரவு நடைபெறும் 'ஹவுடி மோடி!' பேரணியில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி அந்நகருக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை (உள்ளூர் நேரப்படி) ஹூஸ்டனில் தரையிறங்கிய பிரதமர் மோடியை இந்திய, அமெரிக்க உயர் அலுவலர்கள் பலர் வரவேற்றனர்.
அப்போது, அமெரிக்க பெண் அலுவலர் ஒருவர் பூச்செண்டை கொடுத்துள்ளார். அதனை பிரதமர் மோடி வாங்கும்போது அதிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது.
இதனைக் கண்ட பிரதமர், யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென கீழே குனிந்து அந்தப் பூவை எடுத்து அருகிலிருந்த பாதுகாவலரிடம் கொடுத்தார்.
ஹூஸ்டன் விமான நிலையத்தில் தரையிறங்கும் பிரதமர் மோடி அந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட காணொலி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது. நரேந்திர மோடியின் செயலை இணையவாசிகள் பலரும் பாராட்டிப் பதிவிட்டுவருகின்றனர்.
ஹூஸ்டனில் என்.ஆர்.ஜி. கால்பந்து உள் அரங்கில் நடைபெறவுள்ள ஹவுடி மோடி பேரணியில் அமெரிக்க அதிபர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். இந்தப் பேரணிக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்கவுள்ளனர்.