பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, தற்போது ஹூஸ்டன் நகருக்குச் சென்றுள்ளார். அங்குள்ள என்.ஆர்.ஜி. கால்பந்து உள்அரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள பிரமாண்ட பேரணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் உரையாற்றவுள்ளார். இதில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, அமெரிக்க வாழ் இந்தியர் சமூகத்தின் பலரை மோடி சந்தித்துவருகிறார். அந்த வகையில், சீக்கிய சமூகத்தினை சந்தித்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீக்கியர்களுக்கு பலனளிக்கும் கர்தார்பூர் பெருவழி உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து, 1984 சீக்கிய இனப்படுகொலை, அரசியல் அமைப்புச் சட்டம் 25 பிரிவு (சீக்கிய மதத்தை தனி மதமாக அறிவிக்க திருத்தம் கொண்டுவருதல்), ஆனந்த் திருமண சட்டம், நுழைவுஇசைவு (விசா), கடவுச்சீட்டு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்த்துத் தருமாறு பிரதமரிடம் சீக்கியர்கள் மனு அளித்துள்ளனர்.
அப்போது, சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர், "பிரதமர் நரேந்திர மோடி என்னும் புலி, அமெரிக்காவுக்கு வந்தது பெருமையாக உள்ளது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.