கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 94.5 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் நவம்பர் இரண்டாம் வாரம் அறிவித்தது.
இந்நிலையில், மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை முடிவுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளதால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அவசர அனுமதிகோரி விண்ணப்பிக்க உள்ளதாக மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் தால் ஜாக்ஸ் கூறுகையில், "இந்தத் தகவல்கள் வலுவானவை என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை பெற இது போதுமானதாக இருக்க வேண்டும். மேலும், சர்வதேச அங்கீகாரத்திற்கும் இதுபோதும் என்றே நாங்கள் நம்புகிறோம் "என்றார்.