கரோனா தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணிகளில் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி 94.5 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அவசரப் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கக் கோரி கரோனா தடுப்பூசி குறித்த விவரங்களை மாடர்னா நிறுவனம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அளித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில், மூன்று கரோனா தடுப்பூசிகளுக்கு அவசரப் பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம்கட்ட மருத்துவ சோதனை முடிவுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளதால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் அவசர அனுமதிகோரி விண்ணப்பிக்க உள்ளதாக மாடர்னா நிறுவனம் நேற்று (நவ.30) தெரிவித்தது.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட மாடர்னா நிறுவனத்தின் மூன்றாம்கட்ட சோதனையில் பங்கேற்றவர்களில் 196 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 11 பேர் மட்டுமே உண்மையான தடுப்பு மருந்தைப் பெற்றவர்கள். கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவர், உயிரிழந்த மற்றொருவர் என மற்ற 30 பேர் டம்மி மருந்தைப் பெற்றவர்கள்.
இதுகுறித்து மாடர்னா நிறுவனத்தின் தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் தால் ஜாக்ஸ் கூறுகையில், "நாங்கள் ஏற்கனவே, சோதனையில் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். இந்தத் தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்படால் கோடிக்கணக்கானோரை எங்களால் காப்பாற்ற முடியும்" என்றார்.