உலகப் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை தொடங்கியவருமான பில் கேட்ஸின் தந்தை வில்லியம் ஹெச். கேட்ஸ் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவருக்கு வயது 94.
தந்தையின் மறைவு குறித்து பில் கேட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் அப்பா 'உண்மையான' பில் கேட்ஸ். நான் அவரைப் போலதான் இருக்க முயல்கிறேன், ஒவ்வொரு நாளும் நிச்சயம் அவரை நினைத்து நான் வாடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அல்சைமர் எனப்படும் ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த கேட்ஸ் வாஷிங்டனிலுள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை உயிரிழந்தார். பில் கேட்ஸ் மேலும், "என் அப்பாவின் ஞானம், தாராள மனப்பான்மை, பணிவு ஆகியவை உலகெங்கிலும் உள்ள மக்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
எனக்கு வயதாகும்போதுதான், வாழ்க்கையில் நான் செய்த எல்லாவற்றிலும் எனது அப்பாவின் முக்கியப் பங்கு இருந்ததை உணர்ந்தேன். மைக்ரோசாஃப்டின் ஆரம்ப ஆண்டுகளில், சட்டரீதியாகப் பல விஷயங்களில் அவரிடமிருந்து ஆலோசனை பெற்றுள்ளேன்" என்று எழுதியுள்ளார்.