மெக்சிகோ நாட்டின் மிச்சோகன் (Michoacan) மாகாணத்தில் உள்ள எல் அகுஜே நகரில் அந்நாட்டு காவல் துறையினர் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, காவல் வாகனத்தை திடீரென சூழ்ந்துகொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது. பின்னர் காவல் துறை வாகனத்துக்கு தீமுட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இந்தச் சம்பவத்தில், 14 காவலர்கள் கொல்லப்பட்டனர். மூன்று காவலர்கள் காயமடைந்தனர். இரண்டு காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாகின.
காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் பிக் அப் டிரக்குகளில் வந்ததாக சம்பவத்தை கண்ட சாட்சிகள் கூறுகின்றன. மேலும், இவர்கள் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலான ஜலிஸ்கோ நியூ ஜனரேஷன் கார்டெல் (Jalisco New Generation Cartel) சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவில், கடந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் தொடர்பான குற்றச் சம்பவங்களில் 29 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: நடப்பாண்டுக்கான புக்கர் பரிசு அறிவிப்பு!