நியூயார்க்கில் நடைபெற்ற 74ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் காஷ்மீர் குறித்தான தனது கருத்தை வெளிப்படுத்திய மலேசியா பிரதமர் மகாதீர் முகமது, “ஐம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்தியா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றை நான் தவறானதாகவே பார்க்கிறேன்.
காஷ்மீர் குறித்து ஐநா தீர்மானம் இருந்தபோதிலும், அப்பகுதியை இந்தியா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது. ஐநாவுக்கு எதிராக இந்தியா செயல்படுவது சரியல்ல” என காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தானுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மலேசியா பிரதமர், “ரஷ்யாவில் பிரமதர் மோடியை நான் சந்தித்துப் பேசியபோது, காஷ்மீர் பிரச்னையை ஆக்கிரமிப்பு மூலம் அல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைத்தேன். ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை” என்றார்.
அரசியலமைப்பு சட்டம் 370ன் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தகுதியை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான், சீனா, துருக்கி ஆகிய நாடுகள் சிகப்பு கொடி காட்டியுள்ளன.
எனினும், காஷ்மீர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை என்றும், இதில் மூன்றாம் தரப்பில் தலையீடு தேவையில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.