பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் உலக அளவில் பிரபலமானவை. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு அரிய வகை மரங்கள் காணப்படுகின்றன. அரிய வகை விலங்கினங்களும் வாழ்ந்து வருகின்றன. பூமியில் கிடைக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 விழுக்காடு இங்கிருந்தே கிடைக்கிறது. அமேசான் காட்டை பூமியின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9, 500 இடங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது. பிரேசிலில் சாபாலோ நகரில் 2,000 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து காட்டுத் தீ பரவி வருகிறது. இந்த சம்பவம் உலக அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'காடுகளின் நுரையீரல் கிரகத்திற்கு முக்கியமானது " - போப் பிரான்சிஸ்
காடுகளின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகள், இந்த கிரகத்திற்கு முக்கியமானது என்றும் அதை காப்பது நமது கடமை என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
அமேசான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சர்வதேச பிரச்னையாக மாறியுள்ளதால், பிரேசில் அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ, 83 விழுக்காடு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால், நடிகர், நடிகைகள் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கவலையுடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறுகையில், 'அமேசானில் பரவி வரும் காட்டுத் தீயால் நம் அனைவரையும் கவலை அடைய வைத்துள்ளது. நம் அனைவரின் அர்ப்பணிப்புடன், அமேசானில் பற்றி எரியும் தீ அணைக்கப்பட்டு அங்கிருக்கும் பழங்குடியினர் மீட்கப்படுவார்கள். வளங்கள் நிறைந்த புதிய அமேசானை மீண்டும் காண்போம். காடுகளின் நுரையீரல் இந்த கிரகத்திற்கு அவசியமானது', என்றார்.